Sunday, December 25, 2016

பூக்களின் மனதோடு எழுதும் ஒரு மடல்...!!

துளசியின் மனதோடு..,
மல்லிகையின் மணத்தோடு..,

முல்லையின் சிரிப்போடு
இருவாட்சியின் நிறத்தோடு..,

பவள மல்லியின் உருவத்தோடு..,
பட்டு ரோஜாவின் அழகோடு..,

தாமரை முகத்தோடு..,
அல்லியின் கண்களோடு..,

ஆம்பலின் குவிந்த இதழோடு..,
மாதுளையின் வெட்கத்தோடு..,

ஊதாவின் உயிர்ப்பான பேச்சோடு..,
பன்னீர்  பூக்களின் விரல்களோடு..,

என்னை கட்டிப்பிடித்து..,
காதலோடு சொன்னாள் அவள்..,

அப்பா என்று.., !!  நான்..,
திணறித்தான் போனேன்..,
என் பொன் மகளின் முகம் பார்த்து.!!!.

இப்போது..,,
மணமுடித்து போன.., என் மகளின்..,
மன வரிகளின் மகிழம் பூ  கடிதம்..,,

என் முகவரி தேடி வருமா..,??
என எதிர்பார்க்கும்..,
ஒரு  செண்பகப்பூவின்  தந்தை..,!!!
   
                                                                      உமா நாராயண்,(குமரி உத்ரா)  


   

மகிழ்ச்சியின் வகைகள் ...!!

குழி விழுந்த கண்களோடு ..,
ஒட்டிப்போன வயிற்றோடு ..,
வெட்டிவேராய் சுருங்கிய..
முக வரிகளோடு..,
மூத்தவர், விதைத்த நெல் நாற்றுக்களை..
வெடித்த தேகங்களில்..,உள்வாங்கி..,
வேதனை தாங்காமல் நிலமங்கை..!!

காண சகிக்காமல்,ஆகாய பொத்தல் வழியே..,
மடிந்து விழுந்த மழைத்துளிகள்.,
முதல் வருடல் கொடுத்து.,
முத்தம்(மாரி )பொழிய..,
நாளை அந்த நெல்மணிகள் ..,
நாலுபேர் பசியாற்றும்..,!
விவசாயி மகனுக்கோ..,முகமெல்லாம் மகிழ்ச்சி.!!
 
புது மாங்கல்ய  சரடொடு..,
இதயம் இறகாய் பறக்க ..,
வண்ணத்து பூச்சியின் 
கண் கவர் வண்ணங்களோடு.,
வாழ்க்கை நந்தவனத்திற்குள் நுழைந்து ..,
வாழ்ந்த வாழ்வுக்கு ஒரு சாட்சியாய் ..,!!

கருவறையின் கதவை, குழந்தை தட்டும்போது..,
பாவை அவள், பற் கடித்து.. பலமிழந்த போது..,
எழுதாத கவிதை  ஒன்று தன் நகலாய்..,
வெளிவந்த போது..,
தாய் பெறுவாள் தன்னகரில்லா மகிழ்ச்சி..!!

பாலைக்கு பிழைக்க வந்து ..,
எட்டுக்கு எட்டடியில்..,ஊன் சுருக்கி,உண்டி சுருக்கி.,
கனவு பெருக்கி, கண்ணீர் பெருக்கி..,
மிதியடியாய் தேய்ந்து, உதிரம் உதிர்த்து.,
நித்தம் தொழிலாளிகள் செய்யும்,வேலை யுத்தங்கள்.,!!

அலுமினிய பறவையில்,ஒரு பயணியாய் .,
தாய் மண் மிதித்து ,உயிர் நெக்குருக, உச்சி மோந்து.,
மனைவியின் விழி குளத்தில் நீந்தி.,
சொந்தங்களின் விரல் பிடிக்கையிலே.,
ஆயிரம் வானவில்கள் வரவேற்பது போல.,
அவனுக்கு,வரும் மட்டற்ற மகிழ்ச்சி..!!

உப்பு மூட்டை தூக்கி, பின் பாரமூட்டைகள் தூக்கி.,
சைக்கிள் மிதித்து, தேய்ந்த பாதரேகைகளோடு..,
தான் பாதசாரி ஆனாலும், தனயன்..,
அவன், பட்டதாரியாய் படிக்க..,
உண்டியல் உடைத்து.,பட்டினி கிடந்து..,
விறகடுப்பில் இன்னொரு விறகாய் ..,
உடையும் பெற்றோர்களை.,!!

பாரமாய் நினைத்து ,முதியோர்இல்லங்களில்..,
கைகழுவி விட்டு, விடைபெறும் சில ..,
விஷ.. விதைகளில்...,,
தன் வாரிசுகள் மட்டும்..,
தம்மை கடைசிவரை காக்கும்..,
என்ற நம்பிக்கையில்..,சிரிக்கும்.,
மூத்தவர்களின் மகிழ்ச்சி..!!

மகிழ்ச்சி..,  ஒரே வகை ..,!!
மனங்கள்.., தான் பல வகை..!!

மகிழ்ச்சி என்னும் மகுடம் அணி..,
ராஜாவாய் நீ ..!!

மகிழ்ச்சி என்னும் பாரிஜாதத்தை நேசி..,
மணமாய் நீ..!!

மகிழ்ச்சி என்னும் புல்லாங்குழலை வாசி..,
இசையாய் நீ..!!

மகிழ்ச்சி என்னும் மந்திரத்தை சுவாசி..,
நீயே என்றும் சுகவாசி...!!
                                    உமா நாராயண்.(குமரி உத்ரா) 

                                      

Saturday, December 24, 2016

தண்ணீர்..., சிறுகதை..!!!

         
                                               
                                         

    ராமசாமி...,ராமசாமி .., மாத்தூர் டேமில..,தண்ணீர் திறந்து விடுறாங்களாம்.” ஆத்துல..,  தண்ணீர் வரப்போகுது. பயிர்களெல்லாம் வாடிப்போய் கிடக்குது.  தண்ணியை..,நம்ம வயல்களுக்கு திருப்பி விடலாம். சீக்கிரம் வா...!!”“மேலத்தெரு  மாடசாமி சொல்ல.., ராமசாமி துள்ளி குதித்து எழுந்தான்.!!

    மனைவி மல்லிகா எடுத்து வைத்த.., கஞ்சியையும்.., ஆவக்காய் ஊறுகாயையும்.,அவசரமாக வயிற்றுக்கு வார்த்தான். மண் வெட்டியை தோளில் சாய்த்து.., மாடசாமியுடன் வயலுக்கு விரைந்தான் ராமசாமி.!!

   ஆற்றில் வெள்ளம் அலை புரண்டோடி  வந்தது. நுரை பொங்கும் தண்ணீரில்,சோர்ந்து கிடந்த நெத்திலி மீன்களும்..,கெண்டை மீன்களும் வெள்ளி உருகலாய் குதித்தாடின. பறவைகள் தாழ்வாக பறந்து தண்ணீர் பரப்புகளில் இறங்க ஆரம்பித்தன. மீன் கொத்திகளும்..,கொக்குகளும்., தாவி விழுந்த மீன்களை லாவகமாக கொத்தின..!!

      குழந்தைகள் கும்மாளமாக தண்ணீரில் குதித்தார்கள். சில குழந்தைகள் மண் புழுக்களை.., தூண்டிலில் வைத்து, மீன் பிடிக்க தயாரானார்கள். மரங்களின் வேர் பகுதியில் தண்ணீர் தழுவ..,குளுமையில் சிலிர்த்தன மரங்கள். தண்ணீர் கிளை வாய்க்கால்களில்., பாய்ந்து ஓடியது.!!

      வயலின் வரப்புகளை வெட்டி.., தன் வயல்களுக்கு தண்ணீர் பாய விட்டான் ராமசாமிபயிர்கள் சின்ன சிணுங்கலோடு..,அசைந்து ஆடியது. ராமசாமியின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இன்னும் இரு மாதங்களில் கதிர்கள் வந்து விடும்.பின் மாடுகள் வைத்து, நெல்மணிகளை களைந்து.., பத்தாயத்தில் தட்டி போடணும்இனி வயிற்றுக்கு பஞ்சம் இல்லை. கொஞ்சம் நெல்மணிகளை விதை நெல்லுக்கும்., இரண்டு மரைக்கால் நெல் மாடசாமிக்கும் கொடுக்கவேண்டும். சந்தோஷத்தில் ஆடும் பயிர்களை பார்த்து சிரிக்க தொடங்கினான்.!!

“ என்னங்க..,. சீக்கிரம் எழும்புங்க..,,மல்லிகா தான் அவனை,எழுப்பி கொண்டிருந்தாள். சிமென்ட்பேக்டரியில.., ஜல்லி வந்து இறங்கி இருக்காம்.!! சீக்கிரம் போங்க”.., மல்லிகாவின் கத்தலில் முழித்து பார்த்தான் ராமசாமி..  பாயில் இருந்து விழித்தான். “சீக்கிரம் பேக்டரிக்கு  போங்க.! “என்றவள் பல் தேய்த்து வந்தவனிடம் அந்த, தண்ணீர் பாட்டிலையும், கஞ்சி வாளியையும் நீட்டினாள். தண்ணீர் குடிக்காம நிக்காதீங்க.” இப்போ என்னன்ன நோய்களோ வருது.. என்றாள்.!!

தண்ணீர் பாட்டிலை வாங்கியவன்.., அதை உற்று நோக்கினான். தண்ணீர் தடுமாற்றமாய் உள்ளே அலம்பியது.!! பாட்டிலை தோள் பையில்
வைத்தவன் பேக்டரியை.., நோக்கி...,பொடி  நடையாய்  நடக்க...,ஆரம்பித்தான் மாடசாமியோடு...!!  



                                   உமா நாராயண்,(குமரி உத்ரா)
                                         

Tuesday, December 20, 2016

மல்லிகை _ சிறுகதை...!!!

         வான மைதானத்தில் சிதறிய நட்சத்திரங்களாய் ..,உதிர்ந்திருந்த மல்லிகை மொட்டுக்களை ,எடுத்த மஞ்சுளாவின் கைகள் நடுங்கின .
 வெள்ளைப் பூக்களில் மனம் வசமிழந்து போக.,நறுமணம் நாசியில் ஊடுருவ ஏக்கமாய் உதிரிப் பூக்களை கோர்க்க ஆரம்பித்தாள்.
           அக்கா., அக்கா..,எனக்கு  பூ வச்சி விடுவியா அக்கா..,?கடைசி  தங்கை மல்லிகா கொஞ்சலாய் கேட்டாள்.அவள் தலை நிறைய  மல்லிகையை சூடும் போது,இனம் புரியா வேதனை எழுந்தது.
      என்னுடைய நீள கூந்தலில்.., சரம்  சரமாய் பூக்களை படர விடும் வாய்ப்பு எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை..? வெள்ளை உடையில் உலா வரும் என் இதய குமுறல் யாருக்கும் கேட்க வில்லையா .?     வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை போல, மகிழ்ச்சியாய் சிரிக்கும் மல்லிகைளை விழிகள் விரிய ஆசையோடு வெறித்தாள். மஞ்சுளா.
       நானும் ஒரு நாள் இந்த வெள்ளை உடையை உதறி விட்டு...., மகிழ்ச்சியோடு., சிரிக்கும்  மன்னவனோடு ,தலை நிறைய பூக்களோடு கலர் புடவைகளில் களிப்போடு வலம் வருவேன்.!!
      கரை தட்டிய படகாய்.., நினைவலைகளை கலைத்தது தோழி வருணாவின் குரல்.”என்னடி.. மஞ்சு.,நீ இன்னும் டூட்டிக்கு கிளம்பலியா ..?ஃசீப் டாக்டர் அரவிந்த் திட்டப்போறாரு,” தோழி வருணாவின் குரல் கேட்டு, தற்காலிக ஆசைகளுக்கு அணை போட்டு.., அவசரமாய் உள்ளே ஓடினாள்.
       ““மலருக்கு மணம் சிறப்பு.! மங்கைக்கு குணம் தானே சிறப்பு.!””அந்த குணம் என்னுள் இருப்பதால் தானே..., இந்த புனிதமான பணியை செய்து வருகிறேன். அந்த இறைவனே..., மனம் போல மகிழ்ச்சியான ஒருசிறப்பான வாழ்க்கையை தருவார். மகிழ்ச்சியாய் சிரித்தபடி வெளியே வந்தாள்.          
     “வரு.., நான் ரெடி....கிளம்பலாமா...?” “வெள்ளை சீருடையில்., தலையில் அமர்ந்திருந்த , வெள்ளைத் தொப்பியில்..,  வெள்ளைப் புறாவாய், ஒரு வெள்ளை மல்லிகையாய்  தெரிந்தாள் மஞ்சுளா.!
          மருத்துவமனை வந்த., மஞ்சுளாவின் முகம் பார்த்ததும்.. “,சிஸ்டர்.. வாசு.., நீங்க வந்த பிறகு தான் சாப்பிடுவேன்னு..,அடம் பண்றான்”. ஏழு வயது வாசுவின் தாய் ஏக்கமாய் சொல்ல, ”வாசு..., கால்வலி குறைஞ்சிடுச்சி இல்லை”  இன்னும் இரண்டு நாளிலே நீ ஸ்கூல் போகலாம்.., சாப்பிடுப்பா...” வாசுவின் தலை கோதி அவள் ஊட்டிவிட.. வாசு சாப்பிட ஆரம்பித்தான்.
     “சிஸ்டர் வேணிக்கு வாமிட் வருது.., சீக்கிரம் பாருங்க” டாக்டரின் குரலில் ஓடினாள் மஞ்சுளா.
          ஆறுதலாய் வார்த்தைகள் சொல்லி, தலை தடவி...,நொந்த நோய்களுக்கு  மருந்தூட்டி.., பரிவாய் பேசிய அவளின் கனிவான கவனிப்பில்..,நோயாளிகளின் முகங்களில் பரவச மகிழ்ச்சி.!
      மஞ்சுளா.., மலர்ந்த மல்லிகை முகத்தோடு.,  இறக்கை கட்டிய வெள்ளை தேவதையாய்..,இன்னுமொரு தெரசாவாய், எல்லோரின் கண்களுக்கும் தெரிய ஆரம்பித்தாள்..!! 

                              உமா நாராயண் (குமரிஉத்ரா)                                       
               
     


            

உதவி ...!!!

கதிரவன் ஒளியில்.,உலகம் பெற்றது.,
மகத்தான உதவி..!!

குளிர் நிலவின்.,தன்னொளியில்.,
அல்லியும், மல்லியும்.,பெற்ற
அறிய உதவி..,!!

விதைகளாய் புதைந்து.,பின் உயிர் எழுந்து.,
பலன்களை அள்ளி கொடுக்கும்.,
மரங்களின் மேலான உதவி..,!!

சேற்றில் மண் மிதித்து.,சோற்றில் கை வைக்க உதவிய..,
விவசாயத்தின்..,விசேசமான உதவி..,!!

நிகரில்லா உடல் தானம் தந்து.,
இன்னொரு கடவுளாய் உயிரை.,
காத்து தரும் உன்னத உதவி..,!!

நட்பை கற்பாய் நினைத்து..,
பல நேரங்களில் அரவணைக்கும்..
சினேகிதர்களின் சீரிய உதவி..,!

உதவிகள் செய்து..,மனவானில் உயருங்கள்..,!!
மன வாசலை திறந்து..,வானுயர.., வையகம் வாழ்த்த..,
இன்னும் இன்னும் உதவிடுங்கள்..,!!

உயர்ந்த உள்ளங்கள்..,ஏற்றிவைத்த ஏணிப்படிகள்..,
நீங்கள் என்றும்.,ஏற்றமாய் உயா்வீர்கள்..,!!

உமா நாராயண் (குமரிஉத்ரா)

Monday, December 19, 2016

என் மகன்..!!!

குளிர் நிலவு..,
குளிப்பாட்டியது இருளை.,!!

நட்சத்திர மீன்கள்.,
நடை பயின்றது வானக்கடலில்.,!!

இரவோடு இரவாய்.,
மறைந்திருந்து எட்டி பார்த்தது.,
அவன் நினைவு.,!!

என் அணைப்பில்.,
அவன் உறவு.,,
எனக்கும் இது புது உணர்வு.,!!

புது மொட்டு..,
பூவுலகம்  தொட்டு.,
என் கையில் புரண்ட போது.,!!

பாய்ந்தது புது ரத்தம்.,
உணர்ந்தது புது ஸ்பரிசம்.,!!

இன்று.,  எனக்கு தூங்கா இரவு.,
ஆம்., என் மகனின்.,
குவா., குவா.,  சத்தம்..,!!! 
                                                   
                                                         உமா நாராயண், (குமரி உத்ரா)

இறந்த காலங்கள் ..,!!



                              இறந்த காலங்கள்..!! 

என்   இறந்தக்காலம்..,அவள்..,
கைப்பிடித்து., நான்..,
நடந்து பார்த்தபோது..,!!

என் இறந்தகாலம்.., அவள்..,
நிலவை பிடித்து தருவதாக..,
அன்னம் தந்த போது..,!!

என் இறந்தகாலம்..,அவள்..,
என்னை பள்ளிக்கு அனுப்பி..,
நான்அழும்போது., மறைந்து பார்த்தது.,!! 

என் இறந்தகாலம்.,நான்., 
மணமுடித்து போகும்  போது.,
அவள் அழுது பார்த்தது.,!!

என் இறந்தகாலம்.,அவள்., 
என் குழந்தையின்.,
குறும்புதனங்களை ரசித்து பார்த்தது.,!!

ஆம்..,இறந்தகாலம்.,
என் தாயை., நான் மறுபடியும்.,
இப்படி பார்ப்பது.,!!  

                                                    உமா நாராயண்,(குமரி உத்ரா)  
    



      
  

Saturday, December 17, 2016

ஆசிரியர்..!!



                                     


கூவாத குயில்களாய் .,
இருந்த நம்மை..,
கூவ வைத்து , குரல் மொழியை.,
புரிய வைத்தவர்..!!

வெள்ளை பலகைகள் நம்மை.,
கரும் பலகையில்.,
வார்த்தை சித்திரங்களை.,
வரைய வைத்தவர்.,!!

ஆயூத எழுத்துக்கள்நம்மை.,
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
எத்தனை முக்கியம் என.,
ஆயுதம் எடுக்காமலே.,
ஆர்வமாய் கற்பித்த ஆசான் அவர்.,!!

வண்ணத்து பூச்சிகள் நம்மை.,
வண்ண  தூரிகை எடுத்து.,
வானவில் படைக்கும்.,
பிரம்மா ஆக்கியவர்.,!!

முதல் பணியில் நுழைந்த நம்மை.,
முதலெழுத்து.,கையெழுத்து.,
போட பழகி தந்தவர்.,!!

குறும்பாய் குலவி வந்த நம்மை.,
வாழ்க்கை பாடங்களில் .,
பரிட்சை எழுத வைத்தவர்.,!!

தந்தையாய் தாயாய் ஆனநம்மை.,
நம் வித்துக்களான குழந்தைகளுக்கு.,
உரு சொல்லி.,உருக வைத்தவர்.,!!

அந்த ஆசிரியர்.,
பெரு மக்களுக்கு.,
குரு வணக்கம்
 சொல்வோம் வாருங்கள்.,!!

                                                              உமா நாராயண்,(குமரி உத்ரா)

 




  
  




















கருணை..!!


                    


அன்னை தெரசா...,
கண்களில் எடுத்த ஆயுதம்.. கருணை..!!
இன்றைய உலகில்..,
இடறி விழுந்த காகிதம்..கருணை..!!
அடுக்களை அஞ்சரை பெட்டியில்..,
அரிதான ஒரு சாதனம்..கருணை..!!
வீதியில் விளையாடும் கொலை விளையாட்டுக்களை.,
கண்டு பதுங்கு குழியில் பதுங்கியது..கருணை..!!
முரட்டு உலகில் முகம் காட்ட மறுத்து..,
முகவரி தொலைத்த முகமூடி..கருணை..!!  
அடை  மழை வந்தும்..,
வந்து பார்க்காத வானவில்..கருணை..!!
இரக்கத்தின் சகோதரி..,
நோய்ப்பட்ட பிணைக்கைதி..கருணை..!!
கருணை..., இருந்தும் இல்லாத மாதிரி..,
ஒரு மன பிரமை..!!
சில நேரங்களில், கருணை..,
உயிருக்கு உரு கொடுக்கும் உடல் தானமாய்..,
ரத்தத்தால் சொந்தம் தரும் இரத்த தானமாய்..,
காட்சி பிழை நீக்கும், கண் தானமாய்..,
வானில் மிளிரும் மின்னலாய்..,
வந்து செல்கிறது..,!!
காசில்லாமல்.., கிடைக்கும் கருணை..,
கண்ணியமானவர்களிடம் ..,மட்டும்..!!!!

                                  உமா நாராயண்,
                                   குமரி உத்ரா,


குடும்பம்..!!


   

                                       


 நான்கு அறைகள் கொண்ட..,
வீடு இதயம்..!!

பல மனங்கள் இணைந்த..,
கூடு , குடும்பம்..,!!

தலைமுறைகள் தளிர்த்து.,
வளரும் அழகு  ஆலயம்.,!!

கூட்டுக் குடும்பத்தின்.,
குதூகலிப்பில் நனைந்து .,
பாருங்கள்.,!!

நாள் எல்லாம் கார்த்திகை.,
மனமெல்லாம் மல்லிகை.,!!

பாசக்கூடு., இது ஒரு நேசக் கூடு.,
பல உயிர்களின் சுவாசக் கூடு.,!!

கண்டிப்பும்., காதலும்.,
தியாகமும் .,பரிவும்.,!!

பாசமும் நிறைந்த.,
உறவுப் பூக்கள் கொண்ட.,
இணைப்பூ.., குடும்பம்.,!!
                                                       உமா நாராயண்.
  




  

காற்றோடு ஒரு பயணம்..!!



                         


ரயிலோர ஜன்னல் சீட்டில்..,
ரகசியமாய்..,
காற்று வந்து காதோரம் கதை சொல்ல.,
நான் ரசித்த பயணம் அது.,!!

சக பயணியின்.,முதல் சிரிப்பில்.,
அறிமுகம் சொல்லி..,
காற்று வந்து , அனுமதி இல்லாமல்.,
கூந்தல் முகவரிகளை கலைத்துப்போக.,
நான் ரசித்த பயணம் அது.,!!  

தொடரியின் தொடர்ஓட்டத்தில்.,,
மனது எங்கோ ..,தொலைந்து போக.,
காற்று வந்து மெல்ல தேகம் வருட.,
நான் ரசித்த பயணம் அது.,!!

மெல்லிய இசையின் மேல் மாடத்தில்.,
நான் லயித்துப்போக.,
ஒரு கைக்கார கள்ளி போல.,
காற்று என்னை களவு கொண்டு போக.,
நான் ரசித்த பயணம் அது.,!!

அந்த பயண பெட்டியில்.,  
எங்கள் மூச்சுக்காற்று நிரம்பி நிற்க.,
பயணம் முடிந்து வழியனுப்பி பிரியும் போது.,
இனம் புரியா வலி.,!!

காற்றும் இப்போது.,
கலைந்து போயிற்று.,
சக பயணியைப் போல.,!!
                                                               உமா நாராயண்,
                                                                               






யார் யாரோ..!!



                      


யார் யாரோ எழுதிய கவிதையை..,
யார் யாரோ ரசிக்கின்றாா்..,!!

யார் யாரோ  எடுத்த,  உளியில்..,
செதுக்கிய  சிற்பங்களை தரிசிக்கின்றாா்.,!!
யார் யாரோ எடுத்த மொட்டுக்கள்.,
மாலைகளாய் திருமணத்தில் அணிகின்றாா்.,!!

யார் யாரோ எடுத்த நெல்மணிகள்.,
அமுதாய் யாரோ பசியாறுகின்றாா்..!!
யார் யாரோ விதைத்த விதைகள்.,,
இன்று மரங்களாய் தந்த நிழலில் சிரிக்கின்றாா்.,!!

கனவுகள் உடைந்து கவிதைகள் ஆனது.,
யாருக்கு தெரிந்திருக்கும்.,!! 
அந்த கற்கள் பட்ட அடிகள்.,
யாருக்கு புரிந்திருக்கும்.,!!

நெல்மணிகள் சுவாசம் விட்டது.,
யாருக்கு புரிந்திருக்கும்.,!!
மொட்டுக்கள் மலர்ந்த சத்தம்.,
யாருக்கு கேட்டிருக்கும்..!!
.
அந்த மரங்கள் நிழல் தருவது.,
தொடர் கதையாயிருக்கும்.,!!

யாரோ உருவாக்க, யாரோ கனவாக்க.,
காலங்கள் யார் யாருக்கோ .,
மறுபடியும் சுழல்கிறது.,!!
                          
                                         உமா நாராயண்,

,







Friday, December 16, 2016

குழந்தை..,!!



                                      


விழி மீன்களை பார்த்து.,
விண் மீன்கள் சொக்கிப்போயின.,!!

வளைந்த புருவங்கள் பார்த்து.,
வானவில்லும் வியந்து போனது.,!!

செவ்விதழ் தந்த மந்திர புன்னகையில்.,
மாதுளம்  பூக்கள் மயங்கி கிடந்தன.,!!

நுனி மூக்கின் அழகில்.,
மகிழம் பூக்கள் மனமொடிந்து போயின.,!!

காது மடலின் காவியத்தில்.,
காதோரம் செருகும் பட்டு ரோஜாக்கள் தலை கவிழ்ந்தன.,!!

விரலழகின் வீழ்ச்சியில்.,
பன்னீர் பூக்கள்  உடைந்து போயின.,!!

பாத அழகில் பவளமல்லிகைகள்.,
பாத யாத்திரை போயின.,!!

மொத்தத்தில்.,
வெண்ணிலவு தற்கொலைக்கு போயிற்று.,!!

அன்று..,
புதிதாய் பிறந்த மழலைப் பூவைப்பார்த்து.,!!
                                                                                 உமா நாராயண்,(குமரி,உத்ரா)

மரங்கள்..,எங்கே...??


       

                                     


மரம் தான்..,! மரம் தான்..,!
எங்கும் மரங்கள் தான் சில காலம்..,!!

நற் காலை  என்றாலே., காகம் கரையும்.,
குயிலோசை கேட்கும்..,
மரங்களின் மறைவில்.,!!

குஞ்சுகள் குறை சொல்லும்.,
தாய் பறவை தத்தி வந்து உணவூட்டும் .,
இலைகளின் மறைவில்..,!!

கனிகள் சுவையூட்டும்..,
காய்கள் பசியாற்றும்.,
சமையல் அறையில்.,!!

மருந்துகள் குணமாக்கும்.,
களிம்புகள் காயமாற்றும்.,
மரங்களின் தோல் ஆடையில்.,!!

பூக்கள் சிரிக்கும் ..,
புதிய நறுமணங்கள் தரும்.,
வாசனை திரவியங்களாய்.,!!

வெயிலுக்கு நிழல் தரும்.,
வேர்வைக்கு விசிறி தரும் .,
காற்றின் தயவாய் .,!!

இருக்க நாற்காலி தரும்.,
படுக்க பட்டு கட்டில் தரும்.,
உனக்கு இசைவாய்.,!!

காகிதம் தந்து.,
எழுத்தை பதியம் செய்யும்.,
நிறைவாய்.,!!

மானிடா..,
என்ன தந்தும்..,
நிழல் தருக்கள்., நிமிர்ந்து நிற்க.,
குனிந்த  மனங்கள்.,
நாம் விட்டோமா.,??  
                                                                  உமா நாராயண்(குமரி உத்ரா)       

தாய்மொழி..,!!


                  

எங்கள்  தாய்மொழி...,
பொதிகையில் பிறந்த மொழி.,
தாயாய் தாலாட்டும் கனி மொழி.,
நாவில் தவழும் தன் மொழி.,
தரத்தை உயர்த்தும் தனித்துவ மொழி.,
தாயே .., தமிழ் தாயே .,
உனக்கு அமுதன்று  பெயர் .,
நீ என்றால் எங்களுக்கு உயிர் .,
நீ இல்லாது தரணியில் ஏது சுவாசப்பயிர் ..?
தாய்க்கு ஒரு தாலாட்டு .,
தமிழே உனக்கிருக்கு பாராட்டு .,
தாய் மொழி என்றால் ஆராட்டு .
சிதறிக் கிடக்கும், மொழிகளில் .,
சிலிர்க்க வைக்கும் என் தமிழை .,
பாமரனும் புரிந்திடுவானம்மா ..!
புதையலாய் கிடைத்த பொக்கிஷம் நீ ,
மூன்று எழுத்தில் எங்கள் மூச்சி..,
அவளிருந்தால்  எங்கள் நினைவு .,
அட காதல் தான் இது.,
அவள் தான் எங்கள் தாய் .,
தமிழுக்கு தலை வணங்கு .,
தரணி எங்கும் புகழ் பாடு...!

                                     உமா நாராயண்,
                                        (குமரி உத்ரா)

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...