Monday, December 10, 2018

மறந்த முகவரியும்.., சில மனித முகங்களும்..,!!



பிறந்த போது தாயிடம் என்னை  கையளித்த செவிலி..,!

பள்ளி சென்ற முதல் நாள் தூக்கி  கொண்டு விட்ட  தங்கமணி அண்ணன்..,!

முதல் தமிழை  நாவில் உச்சரிக்க வைத்து உயிரோட்டம் பார்த்த அழகு பாண்டியன் சார்..,!

உழவருக்கு மதிய உணவு கொண்டு சென்று  வயல் வரப்பில் தடுமாற  கை கொடுத்த    வண்டிக்காரர்..,!

உழுது  விட்டு நெல் மணிகளை விதைத்து நாற்றுக்கு உயிர் கொடுத்த விவசாயி..,!

வாய்க்கால் கரையில் ,நண்டு துளைகளில் தென்னங் கீற்று  பரப்பி நண்டு பிடித்த குட்டி நண்பர்கள்..!

பனை மரத்தின் பதநீரை இறக்கி பனையோலை பட்டைகளில் குடிக்க வைத்த பாண்டிக்காரர்..,!

நரிப்பயறும்., நாவல் பழமும்., காரங்காவும்., ஈச்சம் பழமும் அணிலாய்
கொறிக்க சொல்லி தந்த  சின்ன சகாக்கள்..,!!

அம்பலத்திப்  பூவில் தேன் குடித்து, குளத்தின்   ஆழங்களில் நீச்சலடிக்க வைத்த ஆரம்ப கால சிநேகிதிகள்..!

வானொலியின் பதிவலையில் என் குரல் வர என்னை நெறிப்படுத்திய முதல் அறிவிப்பாளர்..!

கவிதைகள் காற்றில்  வலம் வர  செவிகளால் என்னோடு கைக்குலுக்கிய  நேயர்கள்..,!.,

திருமணத்தில் தீ வலம் வந்தபோது  மந்திரம் சொல்லிய பூணுல்
அய்யர்..,!

புகுந்த வீட்டில் மணப்பெண்ணாய்  போனபோது  உறவுகளின் சுய சரிதை சொன்ன பக்கத்து வீட்டுப் பாட்டி..,!

நானும் தாயான போது தைரியம் சொன்ன இளம்
மருத்துவர்..,!

கைகளை கூட்டி., வாய் சப்பிய  குழந்தையை குளிப்பாட்டிய வெள்ளை தேவதைகள்..!

தூரத்து ஆலயத்தில் நேர்ச்சை செய்ய போனபோது ரயிலோட்டிய முகமறியா ரயிலோட்டிகள்..,!

இன்னொரு பறவையாய் ஆகாயம் பறந்து வியந்தபோது பயணத்துக்கு பலம் சேர்த்த விமான ஓட்டிகள்.!

புது தேசத்தில்  நேசக் கரம் குலுக்கி தமிழ் தாகம் தீர்த்த., அன்பின் தமிழ்ச் சொந்தங்கள்..,!

இன்னும் எத்தனையோ..,? 
இறைவனுக்குத்தான்  தெரியும்..,

வழியில் வரப்போகும்..,
முகமறியா சில முகவரிகள்..,!!!


                                                             
                    உமா நாராயண், (குமரி உத்ரா). 




சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...