Monday, May 22, 2017

மழலைப்பூ.., _ சிறுகதை..,!!

                              

                          குடிசையின் வாசலில், வாயில் செருகிய பீடியோடு உட்கார்ந்திருந்தான் மாரிமுத்து.டேய்….மாரி.. உனக்குக் குழந்தைப் பிறந்திருக்காமில்லே….? எனக்கு இனிப்பு தரமாட்டியா..”? என்று கேட்டபடியேவந்தான்வேலு.

       “அடப்போடாமுந்திதான் இரண்டு பொம்பிளைப்பிள்ளை இருக்கே…? இது  பையனா இருக்கும்னு நினைச்சேன்! ம்ஹிம்.. சலித்துக் கொண்டான்  மாரி!
          “என்ன மாரி சலிச்சுக்கிறே…? உனக்குப் பிடிக்கலையா…?”
                “பின்னே என்ன…? இந்த காலத்திலே ஒண்ணைக் கரையேத்துறதுக்குள்ளே அவனவன் படுற பாடு..!”  அதுக்குள்ளே…..இந்த ஆண்டவன் என்னைச் சோதிக்கிறான் பாருடா..?
                மாரி, நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே”? என்ன வேலு…? சொல்லு….அடசொல்லுப்பா…? மாரி.
                “எனக்குத் தயக்கமாயிருக்கு மாரி  வார்த்தைகளை மென்றான் வேலு!
                “சொல்லு வேலு!”  மாரியின் அதட்டலில், “தங்கச்சி உள்ளே வேலையா இருக்கா ..? என்றான்!
                “அடஅவ பிள்ளைங்க கூட விளையாடிட்டு இருப்பா!  நீ சொல்லுடா வேலு .
                “நம்ம பண்ணையார் வீட்டிலே பணம் இருக்கு !  வசதி இருக்கு…!  ஆனாஅவங்களுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை.  ஆதனால..ரொம்ப வருத்தப்படறாங்க இவ்வளவு சொத்து பத்து இருந்து எதுக்கு…? கொஞ்சறதுக்கு ஒரு குழந்தை இல்லையே…?  அதான் ஒரு குழந்தையைத் தத்து எடுக்கப் போறாங்களாம்…..அதனாலே….

                “அதனாலே..என்னடா பீடிகைப் போடுறே..? என்றான் மாரி!  ஒருமுறை வீட்டிற்குள் எட்டி பார்த்து விட்டு, “இந்த குழந்தையைத் தத்து குடுத்திட்டா என்னடா….?  தலையைச் சொறிந்தான் வேலு.

                “டேய் என்னடா சொல்றே…?”  ஆவேசமானான் மாரி.
                “இப்போ ஊருல, உலகத்துலே நடக்காததையா சொல்றேன்அவனவன் குழந்தையை அனாதை இல்லத்திலேயும், குப்பைத் தொட்டியிலேயும் வீசி எறிஞ்சிட்டு போறான். பிள்ளையைத் தத்து குடுத்தா.. பத்தாயிரம் பணம் தருவாங்களாம்.  இப்படி கஷ்டப்பட வேண்டாம்.  அந்த பணத்திலே….ஒரு ஆட்டோ வாங்கி பாட்ஷா மாதிரி பறக்கலாண்டா….என்றான்.
               “நெஜமா வேலு…? பத்தாயிரம் தருவாங்களா…? என்றவனின் விழிகள் வியப்பால் விரிந்தது.

         “பின்னே….சும்மாவா சொல்றேன்.  உன் பிள்ளையும் பெரிய வீட்டிலே ராணி மாதிரி வளருவா! நீயும் கால்பட்டினி, அரைபட்டினியை விட்டு வயிறு நிறைய சாப்பிடலாம்.என்ற வேலுவின் வார்த்தைகள் மாரியின் மனதில் மெல்ல வேர் விட ஆரம்பித்தது
.
       “இந்த பொட்ட பிள்ளையை போட்டுட்டு அவதிப்படுறதை விட, இது நல்ல யோசனைதான்!  ஆனா தேவகி சம்மதிக்கணுமில்லேஎன்றான் மாரி.
      நீ தங்கச்சிகிட்டே சொல்லி சமாதானபடுத்து!  மற்றதை நான் கவனிச்சுக்குறேன்.  காவி பற்கள் தெரிய சிரித்தபடி வெளியேறினான் வேலு!

          மாரிமுத்துவுக்கு இந்த யோசனைப் பிடித்திருந்தது.  எத்தனை பிள்ளையிருந்து என்ன….?  அதற்கேற்ற…..வசதி இருக்கணும்! இந்த பிள்ளை மாடி வீட்டிலே போய் மனம்போல வாழட்டுமே..? பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ஆட்டோ வாங்கினா நல்லா சம்பாதிக்கலாம்.”  தேவகியைச் சமாதானப்படுத்த வார்த்தைகளைக் கோர்வையாக்கி கொண்டான்.

     தேவகியோ.., யோவ்.., "நீ ஒழுங்கா வீட்லே இருக்கிறியன்னா இரு! இப்படி ஏதாவது திட்டம் போட்டே? நான் பிள்ளைங்களோட எங்கேயாவது போயிடுவேன்நாம செய்த தப்புக்கு இந்த பிஞ்சு என்னய்யா செய்யும்..? உனக்குக் குழந்தைன்னா இளக்காரமா போச்சா..? அவங்களுக்குக் குழந்தை வேணும்னா தாய், தகப்பன் இல்லாம ஏங்கிட்டு இருக்கிற எத்தனையோ குழந்தைகளுல.,.. ஒண்ணை எடுத்து வளர்க்கட்டும்! அவள் தீர்மானமாய் சொல்லி சென்றாள் மாலதி.. நீ இன்னும் பள்ளிகூடத்துக்குப் போகலியா..?” மாரியிடம் உள்ள கோபத்தில் முதல் பெண்ணிடம் எரிந்து விழுந்தாள்.

     மத்தியான வெயிலில், பசியோடு கயிற்றுக் கட்டிலில் சாய்ந்திருந்தான் மாரி! யோசனையில் ஆழ்ந்திருந்தவனை ஒரு கரம் மெல்ல தட்டியது.

                    திரும்பி கவனித்தான், மூத்த பெண் மாலதி கையில் மூடிய பாத்திரத்தோடு நின்றிருப்பதை கண்டு முகம் சுருக்கினான்.என்னடி கையிலே…?” கேட்டபடியே உள்ளிருந்து வந்தாள் தேவகி! அம்மா, பள்ளிக்கூடத்திலே மதிய சப்பாடு தந்தாங்க! அதை அப்படியே வீட்டுக்குக் கொண்டு வந்திட்டோம் அப்பாவும், நீயும் சாப்பிடுங்கம்மா! கயிற்று கட்டிலில் வைத்து, நிமிர்ந்தாள் மாலதி!
   தன் முன் இருந்த தட்டை பார்த்தவன் பசியால் சாதத்தை அவசர அவசரமாக வாயில் திணித்தான்! அவன் அவசரமாக சாப்பிடுவதை வெறுப்பாக பார்த்தாள் தேவகி.

                “அந்த புள்ளைங்களுக்கு நம்ம மேலே இருக்கிற அன்பைப் பாத்தியா வீட்டிலே ஒரு படி அரிசி இல்லே! அது தெரிஞ்சதும் தனக்குக் கொடுத்த சாப்பாட்டை நமக்குக் கொண்டுவந்து தருது” “யோவ்.. இந்த குடிசையிலே பணம் வத்தி போயிருக்கலாம்! ஆனா.. பாசம் வத்தி போகல்லய்யா..,!!  இப்போவறுமைதான் வாழ்க்கையாயிருக்கலாம்.. ஆனா, அதுவே நிரந்தரமான உண்மை இல்லைய்யா

                “இந்த வயசிலே, இந்த மனம் இருக்கிற புள்ளைங்க, நாளைக்கு நம்மை நல்லா கவனிக்காதுன்னு நினைக்கிறியா..? நமக்குப் பெண் குழந்தை இருக்கேன்னு நீ கவலைப்படுறே..! நான் பெருமைப்படுறேன்..!

    தேவகி.. என்னை மன்னிச்சிடு? பத்தாயிரம் ரூபாய்க்காக என் பொண்ணையே கொடுக்க நினைச்சேன். நான் இப்போ திருந்திட்டேன் தேவகி.  மூணு பிள்ளைங்களையும்  மூன்று வழிகளிலே நானே, எல்லோரும் பாராட்ட வளர்ப்பேன் தேவகி.., குரல் கனக்க சொன்னான் மாரி!.
                தொட்டிலில், புதுப்பூவாய் தூங்கி கொண்டிருந்த மழலையை தூக்கி அதன் இதழ் ஓரத்தில் இதமாய் விரிந்த அந்த பொக்கை வாய் புன்னகையைப் பார்த்து, “உன்னோட பத்தாயிரம்என் பொண்ணோட இந்த ஒரே ஒரு புன்னகைக்கு போதுமாய்யா..?? குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள். தேவகி.
 
                      உமா நாராயண்,(குமரி உத்ரா,)

                                      

Sunday, May 14, 2017

அம்மாவுக்கு ஒரு அழைப்பு..,!!



கதிரவன் இல்லையென்றால்,
உலகும் ஒளிபெறுமோ....??

அவளும் இல்லை தான்..,
களையிழந்து போனது என் வீடு ..!!

அவள் விட்ட சுவாசக் காற்றும்.,
அடுக்கி வைத்த உயிரற்ற பொருட்களும்.,!!

தடுமாறி நிற்கிறது.., 
எங்கள் வெள்ளை தேவதையை தேடி..,!!

வகிடெடுத்த தலையில்..,
அழகுச் சுருள் முடியும்..,!!

அளவாய் விட்ட குங்குமமும்.,
சின்ன கருவிழியில் கனிவும்.., 
கம்பீரமும்.,!!

சிதறிய சிரிப்பில் மீனாட்சியின் வசீகரமும்.,
ஒரு சின்ன உலகத்தையே...,
சிருஷ்டித்த.,பிரம்மா அவள் ...!!

அவள் உதிர்த்து விட்ட.., 
நானிருக்கிறேன்..,
அவளில்லை.,!!

இளையவள் எனக்கு..,
பாசத்தை தந்து..,பரிதவிக்க விட்டு..,
பறந்து விட்ட என் அம்மா..!!

இன்னும் கைக்குழந்தையாய்..,
நானிருக்கிறேன்.,
கை பிடிக்க வா அம்மா...!!

என் உணர்வுகளில் கலந்து .,
நீ உயிரோடு இருக்கிறாய்..,
அம்மா..!!

உருகும்  மெழுகாய்..,
உருகுகிறேன்.,
இன்னொரு உதயமாய் வா  அம்மா..!!

உலக பெண்மணிகள் பலருண்டு..,
உலகம் உரைக்கிறது ..,! 
இருந்தால் தான் என்ன...??

இதயம் நிறைய நீ தாயாய்.., 
நான் சேயாய்...,
நிறைந்து.., இருக்கும் போது...!!!  


                உமா நாராயண்,(குமரி உத்ரா)


Saturday, May 6, 2017

அவள் ஒரு கவிதை.., - சிறுகதை

    
       
     மாதவனுக்கு மலைப்பாக இருந்தது எதிர் வீட்டையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. இப்படி ஒரு அழகு தேவதையா….?  இந்த அழகு தேவதையா பெற்றெடுத்தவர்கள் பெரும் தவம் செய்திருக்க வேண்டும் என்ன ஒரு அழகு? அவள் கண்களும் வெல்வெட் பாதங்களுக்கு வலிக்குமோ..?

    என்று அவள் நடக்கும் நடையும், அவளின் சிரிப்பும் வாவ் அற்புதம்.
அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் வந்தது மாதவனுக்கு!
    
   மாதவனின் எதிர்வீட்டில் புதிதாக யாரோ குடி வந்திருந்தார்கள் அவர்களின் செல்ல மகளுடன். மாதவனுக்கு இந்த ஒரு வாரமாக கண்கள் அவனை அறியாமலேயே எதிர்வீட்டை சுற்றிவந்தது.

     அவள் வந்தும் ஒரு மாதம் ஓடி விட்டது. அம்மாவிடம் கேட்டு பெயர் கூட, பிரியங்கா என்று அறிந்திருந்தான்.

     பிரியங்கா இப்போதெல்லாம் இவனை அடிக்கடி பார்க்கிறாள் சில நேரங்களில், பார்த்தும் பார்க்காதது மாதிரி…. அப்போதொல்லாம் இவன் நெஞ்சம் வேகமாக அடித்துகொள்ளும்.

     மாதவன், அலுவலகம் விட்டு வந்ததும் அம்மாவின் பேச்சையே உற்று கேட்பான் ஏனெனில் அவள் அப்பாவிடம் பேசும் பேச்சு பெரும்பாலும் பிரியங்காவைப் பற்றி தான் இருக்கும்.

     பிரியங்கா இவனைப் பார்க்கும் போதெல்லாம் மெல்ல சிரிக்கிறாள்,    அவளின் தெற்றுப்பல் தெரிய, அவள் சிரிக்கும் சிரிப்பு.

    மாதவனுக்கு அவளை கைகளில் அள்ளி, அப்படியே  முத்தமிட வேண்டும் போலிருக்கும்; பிரியங்கா இவன் பார்வையை உணர்ந்ததும் உள்ளே ஓடி விடுகிறாள்.

என்றாவது ஒரு நாள் அவளை அப்படியே தூக்கி இரு கன்னங்களில் முத்தமிட வேண்டும் தன் ஆசை நிறைவேறுமா..?

   பிரியங்காவின் அம்மாவும், அப்பாவும் இவன் வீட்டிற்கு வரும் அளவுக்குப் பழகி இருந்தார்கள் ஆனால், பிரியங்கா மட்டும் இவன் வீட்டில் இல்லாத போது வந்ததாக அம்மா சொன்னாள்.

    அந்த ஞாயிற்றுகிழமை மொட்டை மாடியில் நின்றிருந்த மாதவன், பிரியங்கா அவள் அம்மாவுடன் இவன் வீட்டை நோக்கி வருவதை கண்டதும் சந்தோச துள்ளலோடு மாடியிலிருந்து கீழே வந்தான்.

    பிரியங்கா அம்மாவின் பின்னே இவனைப் பார்த்துச் சிரித்தபடி நின்றாள். அவள் அம்மாதான் சொன்னாள்.

வர்ற பதினாலாம் தியதி பிரியங்காவோட பிறந்தநாள் அதுக்கு நீங்க எல்லோரும் வரணும்அவள் சொல்ல..

மாதவன் மெல்ல,”  பிரியாகுட்டி, உனக்கு இந்த அங்கிளோட அட்வான்ஸ் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஐந்து வயது மழலை பிரியங்காவை தூக்கி ஆசையோடு அவள் கன்னங்களில் முத்தமிட்டான் மாதவன்.

                         
                        உமா நாராயண், (குமரி உத்ரா)



                         

Thursday, May 4, 2017

ஹைக்கூ குறும்பாக்கள் - 2

தன்னை இழந்து தன்னருகில் இருக்கும்..,
இருளை நீக்கும்..,
மெழுகுவர்த்தி..,!


அவள் தூண்டில் கண்களில் மாட்டிய..,
சின்னஞ்சிறு  மீன்..,
என் இதயம்..,


காற்றின் நதியில்..,
நீந்திக் கொண்டிருக்கிறது..,
உதிர்ந்த இலை..,!!


பொம்மையோடு, இன்னொரு பொம்மையாய்..,
விளையாடிக் கொண்டிருக்கிறது..,
தாய் பொம்மை.., குழந்தை..,!!


யாதுமாகி நின்றாள் பெண்..,
தாய், மனைவி, மகள்,
குழந்தை..,


          உமா நாராயண்,(குமரி உத்ரா)

Sunday, April 30, 2017

உழைப்பாளி.., உயர்வாய்.., நீ..,

 


மக்கு உருக் கொடுத்து..,
கருவறைக்குள் வைத்து காவல் காத்த..,
தாயும் தந்தையுமா.., தெய்வங்கள்..,??

உதிரத்தை வியர்வையாய் விதைத்து..,
கருவறை உயிர்க்கும் உணவளித்த..,
உலகழந்த உழைப்பாளிகளும் தெய்வங்கள்..,

கடவுள் எனும் உழைப்பாளி..,
கருவறையில் செதுக்கிய உயர்வே நீ..,

மனிதனெனும் உழைப்பாளி..,
நிலவறையில் செதுக்கிய உணவை..,
ஓராயிரம் கைகளில் தவழ வைத்தாய் நீ..,

வியர்வையை பதியமிட்டு..,
நீ ஊன்றி விட்ட விதை மொட்டு..,
வீறு நடைப் போட்டு..,

என்னை விதைத்த கடவுள் எங்கே எனக் கேட்டு..,
உழைப்பாளி உன் பாதம் தொட்டு..,
வணங்கும் நாள் வரும் பாராட்டு..,

கணிணியும்.., கட்டுத் தறியும்..,
உன் விரல் மெட்டுக்களில் இசை பாடட்டும்.,

மனிதனின் மகத்துவம்..,மண்ணின் தனித்துவம்
விரைவிலே உழைப்பில் உயர்வாகட்டும்..,

உழைக்கும் வர்க்கங்கள் இருக்கும் வரை..,
உலகம் இருக்கும்..,

உலகப் பந்து இருக்கும் நாள் வரை..,
உழைப்பும் உயிர்க்கும்..,

உழைப்பின் வலிமை புரியும் போது..,
உயிர்கள் உருகும் ஓசை கேட்கும்..,

உழைப்பாளி..,
எங்கள் உயிர்ப் பை நீ..,

விதைப்பாய்..,
எல்லோர் மனங்களிலும்..,உயர்வாய் நீ..,
  

            உமா நாராயண் (குமரி உத்ரா)







Tuesday, April 25, 2017

"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே" ..,!!

"வீறுடைசெம்மொழித் தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி..!!"





    என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.!!   தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. காலத்தால் மூத்த தமிழ்மொழி,


    தனித்தன்மையால் மிடுக்குற்றுச் செம்மொழியாய்த் திகழ்கிறது., திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மை மொழி தமிழ் செம்மொழியாம். தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை,வளமை, தாய்மை, மும்மை, இயன்மை, செம்மை, வியன்மை என வரும் பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டு செம்மொழி, அதுவே நம் மொழியாகும்..!!





     தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு. 50,000 .., மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே  தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்.  தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்..,!!


      உலகில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளில் தமிழ் மொழியும்  ஒன்று. ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழைமையும்,வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாகவோ.., அல்லது எழுத்து மொழியாகவோ.., ஆட்சி மொழியாகவோ..,பயிற்றுமொழியாகவோ,  இருக்க வேண்டும்.!!


     தமிழ் மொழி்க்கு இவை அனைத்தும் பொருந்தும். உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, தன் தொன்மையை கருதி.., “”என்றுமுள தென்தமிழ்..,”” என்கிறார் கம்பர்.!!





    தமிழ் மொழியானது திராவிட மொழிகளான, கன்னடம், தெலுங்கு மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்கு தாய் மொழியாக திகழ்கிறது.!! 
   
       காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. பிற மொழிச் சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால்., தமிழ் ஒன்றே, பிற மொழிச் சொற்களை நீக்கினாலும்..,எளிதில் இயங்க வல்லது. மிகுதியான  வோ்சொற்களை கொண்டது தமிழ். அவ்வேர்சொற்களைக் கொண்டே புத்தம் புது கலைச்சொற்களை தமிழ் மொழியால் உருவாக்கி கொள்ள இயலும். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி நம் தமிழ் மொழியாகும். இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.


    உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழின் பழமையோ..,அதன் பெருமையோ.., எம் மொழியும் நெருங்க இயலாது. தமிழ் மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கென தனி நோக்கும், போக்கும் கொண்டுள்ளது. இவையாவும், தமிழ் மொழியின் தனித் தன்மைகளே..,!!


     மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண் பட்ட மொழியென்றும் அது தனக்கே உரிய இலக்கிய செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டியுள்ளார்.உலக இலக்கியங்கள் எவற்றிற்கும் இல்லாத தனிச்சிறப்பு, சங்க இலக்கியங்களுக்கு உண்டு.!!


    தமிழ் மொழியின் இலக்கண அமைப்பானது தனிச் சிறப்புடையது. நுண்ணிய அறிவை உண்டாக்க வல்லது. தொல் காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியர் எழுத்து, சொல், பொருள்,யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதினார்..., 




     அந்நூலுக்கு அகத்தியம் என்பது பெயர். இத்தகைய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டுமானால் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ் மொழி தோன்றிச் செம்மைநிலை பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய இலக்கிய இலக்கண வளமுடையது தமிழ்மொழி.!!
  
    எக்காலத்திற்கும் பொருந்தும், மொழியியல் கோட்பாடுகளை வகுத்தது தமிழ் மொழி. நம் தமிழ் மொழியிலுள்ள சொற்கள்..,  மனித உணர்வுகள்.., அனைத்தையும் எண்ணியவாறு வெளிப்படுத்த போதுமானது என்பார் மொழி நூலார்..!

    தமிழ் மொழி காலப் புதுமையை பெறத்தக்க வல்லது. கணிணி பயன் பாட்டிற்கும் ஏற்றது. செம்மொழிக்கான பதினோரு கோட்பாடுகளும்.., முற்றிலும் பொருந்துமாறு அமைந்த ஒரே மொழி நம் தமிழ் மொழியாகும்..,!!




      தமிழ் இந்திய மொழிகளில்,மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளை கொண்டது தமிழ். கண்டெடுக்க பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300 ஆண்டுகளுக்கு, முன்பு உள்ள பிராமி எழுத்துக்களில் எழுத பெற்றவைகளாகும்..!!

     இந்தியாவில் கிடைத்துள்ள 100,000  கல்வெட்டு தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமாக தமிழில் உள்ளன.தமிழ் நூல்களை எளிய நடையில் எழுதலாம். இலக்கண நூல்களை புதிதாக படைத்திடலாம். இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.,!

     பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன.!!

        தமிழ் பிராமி எழுத்துமுறை அசோகரின் பிராமி-யிலிருந்து தோன்றியது என்று சிலவருடம் முன்பு வரை எண்ணப்பட்டு வந்தது. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானைக்கீறல்கள் மற்றும் தேனியில் கிடைத்த கி.மு. 4 , அல்லது ம் நூற்றாண்டின் நடுக்கற்கள் இவற்றிலிருந்து அசோகர் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தமிழ்- பிராமி எழுத்து முறை வழக்கில் இருந்தது என்று கருதப்படுகிறது..,!





      கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜ ராஜ  சோழன் தஞ்சை பெரியக் கோவிலை கட்டுவித்தான். இக்கோவில் 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போது உள்ள கல் வெட்டுக்களிலும் தமிழ் எழுத்துக்கள்  மிகையாக பொறிக்கப் பட்டுள்ளன.!!
     
      சிந்து சமவெளியில் இருந்த மொழி குறித்துப் பலர் பல தியரிகளை
முன்  வைத்துள்ளனர். அங்கு இருந்த மொழி ஆரிய மொழி என்று சிலரும், திராவிட மொழி எனச்சிலரும் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவாக அங்கு இருந்த மொழி ஒரு திராவிட மொழியாகத்தான் இருக்கும்.

      என்ற கருத்தாக்கத்திற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  சிந்து சமவெளியின் மொழி ஒரு "திராவிட" மொழியாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து வலுப்பெறுகிறது. திராவிடமொழி என்னும் பொழுது அது "தமிழின் மூல வடிவம்" என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

     தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக்குறும்பா, சோலகாயெருகுலா   என்னும் மொழிகள் அடங்குவது  தமிழ் மொழிக் குடும்பமாகும்.

    அகர வரிசையான ஆத்திச்சூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள்  ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.!!





      எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானது தான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும் வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம்..,!!

     மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை    விஞ்ஞானப்பூர்வமான சான்றுகள் ஆகும்.


    தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்து நாமும் பெருமைக் கொள்வோம்.!!  தமிழ்., முதல் மொழி.., மூத்த மொழி.., தமிழ் நமது அடையாளம்..,!!!  என வெற்றி முரசுக் கொட்டுவோம்..,!!!


               உமா நாராயண் (குமரி உத்ரா)

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...