Sunday, April 30, 2017

உழைப்பாளி.., உயர்வாய்.., நீ..,

 


மக்கு உருக் கொடுத்து..,
கருவறைக்குள் வைத்து காவல் காத்த..,
தாயும் தந்தையுமா.., தெய்வங்கள்..,??

உதிரத்தை வியர்வையாய் விதைத்து..,
கருவறை உயிர்க்கும் உணவளித்த..,
உலகழந்த உழைப்பாளிகளும் தெய்வங்கள்..,

கடவுள் எனும் உழைப்பாளி..,
கருவறையில் செதுக்கிய உயர்வே நீ..,

மனிதனெனும் உழைப்பாளி..,
நிலவறையில் செதுக்கிய உணவை..,
ஓராயிரம் கைகளில் தவழ வைத்தாய் நீ..,

வியர்வையை பதியமிட்டு..,
நீ ஊன்றி விட்ட விதை மொட்டு..,
வீறு நடைப் போட்டு..,

என்னை விதைத்த கடவுள் எங்கே எனக் கேட்டு..,
உழைப்பாளி உன் பாதம் தொட்டு..,
வணங்கும் நாள் வரும் பாராட்டு..,

கணிணியும்.., கட்டுத் தறியும்..,
உன் விரல் மெட்டுக்களில் இசை பாடட்டும்.,

மனிதனின் மகத்துவம்..,மண்ணின் தனித்துவம்
விரைவிலே உழைப்பில் உயர்வாகட்டும்..,

உழைக்கும் வர்க்கங்கள் இருக்கும் வரை..,
உலகம் இருக்கும்..,

உலகப் பந்து இருக்கும் நாள் வரை..,
உழைப்பும் உயிர்க்கும்..,

உழைப்பின் வலிமை புரியும் போது..,
உயிர்கள் உருகும் ஓசை கேட்கும்..,

உழைப்பாளி..,
எங்கள் உயிர்ப் பை நீ..,

விதைப்பாய்..,
எல்லோர் மனங்களிலும்..,உயர்வாய் நீ..,
  

            உமா நாராயண் (குமரி உத்ரா)







Tuesday, April 25, 2017

"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே" ..,!!

"வீறுடைசெம்மொழித் தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி..!!"





    என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.!!   தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. காலத்தால் மூத்த தமிழ்மொழி,


    தனித்தன்மையால் மிடுக்குற்றுச் செம்மொழியாய்த் திகழ்கிறது., திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மை மொழி தமிழ் செம்மொழியாம். தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை,வளமை, தாய்மை, மும்மை, இயன்மை, செம்மை, வியன்மை என வரும் பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டு செம்மொழி, அதுவே நம் மொழியாகும்..!!





     தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு. 50,000 .., மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே  தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்.  தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்..,!!


      உலகில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளில் தமிழ் மொழியும்  ஒன்று. ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழைமையும்,வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாகவோ.., அல்லது எழுத்து மொழியாகவோ.., ஆட்சி மொழியாகவோ..,பயிற்றுமொழியாகவோ,  இருக்க வேண்டும்.!!


     தமிழ் மொழி்க்கு இவை அனைத்தும் பொருந்தும். உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, தன் தொன்மையை கருதி.., “”என்றுமுள தென்தமிழ்..,”” என்கிறார் கம்பர்.!!





    தமிழ் மொழியானது திராவிட மொழிகளான, கன்னடம், தெலுங்கு மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்கு தாய் மொழியாக திகழ்கிறது.!! 
   
       காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. பிற மொழிச் சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால்., தமிழ் ஒன்றே, பிற மொழிச் சொற்களை நீக்கினாலும்..,எளிதில் இயங்க வல்லது. மிகுதியான  வோ்சொற்களை கொண்டது தமிழ். அவ்வேர்சொற்களைக் கொண்டே புத்தம் புது கலைச்சொற்களை தமிழ் மொழியால் உருவாக்கி கொள்ள இயலும். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி நம் தமிழ் மொழியாகும். இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.


    உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழின் பழமையோ..,அதன் பெருமையோ.., எம் மொழியும் நெருங்க இயலாது. தமிழ் மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கென தனி நோக்கும், போக்கும் கொண்டுள்ளது. இவையாவும், தமிழ் மொழியின் தனித் தன்மைகளே..,!!


     மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண் பட்ட மொழியென்றும் அது தனக்கே உரிய இலக்கிய செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டியுள்ளார்.உலக இலக்கியங்கள் எவற்றிற்கும் இல்லாத தனிச்சிறப்பு, சங்க இலக்கியங்களுக்கு உண்டு.!!


    தமிழ் மொழியின் இலக்கண அமைப்பானது தனிச் சிறப்புடையது. நுண்ணிய அறிவை உண்டாக்க வல்லது. தொல் காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியர் எழுத்து, சொல், பொருள்,யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதினார்..., 




     அந்நூலுக்கு அகத்தியம் என்பது பெயர். இத்தகைய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டுமானால் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ் மொழி தோன்றிச் செம்மைநிலை பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய இலக்கிய இலக்கண வளமுடையது தமிழ்மொழி.!!
  
    எக்காலத்திற்கும் பொருந்தும், மொழியியல் கோட்பாடுகளை வகுத்தது தமிழ் மொழி. நம் தமிழ் மொழியிலுள்ள சொற்கள்..,  மனித உணர்வுகள்.., அனைத்தையும் எண்ணியவாறு வெளிப்படுத்த போதுமானது என்பார் மொழி நூலார்..!

    தமிழ் மொழி காலப் புதுமையை பெறத்தக்க வல்லது. கணிணி பயன் பாட்டிற்கும் ஏற்றது. செம்மொழிக்கான பதினோரு கோட்பாடுகளும்.., முற்றிலும் பொருந்துமாறு அமைந்த ஒரே மொழி நம் தமிழ் மொழியாகும்..,!!




      தமிழ் இந்திய மொழிகளில்,மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளை கொண்டது தமிழ். கண்டெடுக்க பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300 ஆண்டுகளுக்கு, முன்பு உள்ள பிராமி எழுத்துக்களில் எழுத பெற்றவைகளாகும்..!!

     இந்தியாவில் கிடைத்துள்ள 100,000  கல்வெட்டு தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமாக தமிழில் உள்ளன.தமிழ் நூல்களை எளிய நடையில் எழுதலாம். இலக்கண நூல்களை புதிதாக படைத்திடலாம். இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.,!

     பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன.!!

        தமிழ் பிராமி எழுத்துமுறை அசோகரின் பிராமி-யிலிருந்து தோன்றியது என்று சிலவருடம் முன்பு வரை எண்ணப்பட்டு வந்தது. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானைக்கீறல்கள் மற்றும் தேனியில் கிடைத்த கி.மு. 4 , அல்லது ம் நூற்றாண்டின் நடுக்கற்கள் இவற்றிலிருந்து அசோகர் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தமிழ்- பிராமி எழுத்து முறை வழக்கில் இருந்தது என்று கருதப்படுகிறது..,!





      கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜ ராஜ  சோழன் தஞ்சை பெரியக் கோவிலை கட்டுவித்தான். இக்கோவில் 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போது உள்ள கல் வெட்டுக்களிலும் தமிழ் எழுத்துக்கள்  மிகையாக பொறிக்கப் பட்டுள்ளன.!!
     
      சிந்து சமவெளியில் இருந்த மொழி குறித்துப் பலர் பல தியரிகளை
முன்  வைத்துள்ளனர். அங்கு இருந்த மொழி ஆரிய மொழி என்று சிலரும், திராவிட மொழி எனச்சிலரும் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவாக அங்கு இருந்த மொழி ஒரு திராவிட மொழியாகத்தான் இருக்கும்.

      என்ற கருத்தாக்கத்திற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  சிந்து சமவெளியின் மொழி ஒரு "திராவிட" மொழியாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து வலுப்பெறுகிறது. திராவிடமொழி என்னும் பொழுது அது "தமிழின் மூல வடிவம்" என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

     தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக்குறும்பா, சோலகாயெருகுலா   என்னும் மொழிகள் அடங்குவது  தமிழ் மொழிக் குடும்பமாகும்.

    அகர வரிசையான ஆத்திச்சூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள்  ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.!!





      எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானது தான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும் வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம்..,!!

     மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை    விஞ்ஞானப்பூர்வமான சான்றுகள் ஆகும்.


    தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்து நாமும் பெருமைக் கொள்வோம்.!!  தமிழ்., முதல் மொழி.., மூத்த மொழி.., தமிழ் நமது அடையாளம்..,!!!  என வெற்றி முரசுக் கொட்டுவோம்..,!!!


               உமா நாராயண் (குமரி உத்ரா)


Tuesday, April 11, 2017

மூட நம்பிக்கைகள்..,!!! கட்டுரை - 2

றிவில்லாதவா்களை, மூடர்கள் என்கிறோம். தேவையற்ற பழக்க வழக்கங்களை மூட நம்பிக்கைகள் என சொல்கிறோம்.!

      மூட நம்பிக்கைகள் பல வருடங்களாக., மக்களால் பின்பற்ற பட்டு வருகிறது. பல்லி கத்தினால்., பூனை குறுக்கே ஓடினால்..,

    என பல தரப்பட்ட முரணான விஷயங்களுக்கு  உயிர் கொடுத்து..,மூட நம்பிக்கையாய் வைத்துள்ளார்கள்.

                    இன்னும் சில பேர் பெண் குழந்தைகளுக்கு எருக்கம்பால் கொடுப்பதும்..,குழந்தைகளை நரபலி கொடுப்பதும்.., என அரக்கத்தனமான மூடநம்பிக்கைகளை பின் பற்றி வருகிறார்கள். இப்படிப் பட்ட மூட பழக்கங்களை நாம் தான் பலி கொடுக்க வேண்டும்.அவர்களுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டும்..,!!!

     கழுதைகளுக்கு..,  திருமணம் பண்ணி வைத்தால் மழை வரும். என்ற நம்பிக்கை இன்றும் சில இடங்களில் நடந்து வருகிறது.!

       மொத்தத்தில் நம் முன்னோர்கள்.., சொன்ன பல விஷயங்களை.., நாம் மூடநம்பிக்கைகள் என நினைத்துக் கொள்கிறோம். நல்ல நம்பிக்கைகள் தான் எனத் தெரியாமல்...,,,

     அந்தக் காலங்களில்., புளிய மரங்களில்.., அரச மரங்களில் பேய் இருக்கும். அந்த மரங்களின் கீழே, படுக்க கூடாது. என்பார்கள்.! ஆனால் உண்மை என்னவென்றால் இரவு நேரங்களில்..,அரச மரங்கள், புளிய மரங்கள்.., அதிக அளவு கார்பண்டை ஆக்ஸைடை வெளியேற்றும்.

   இரவில் அம்மரங்களின் கீழே படுப்பவர்களுக்கு அது நோயை உண்டாக்கும். அது ஆபத்தாய் முடியும். என்பதைத் தான் நம்மவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்.!

      காக்கைகள் கரைந்தால்.., வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் முன்பு இருந்தது. அந்தக் காலங்களில், கப்பலை ஓட்டுபவர்கள் காக்கைகளை பிடித்து வைத்திருப்பார்கள். தாங்கள் வரும் பயணங்களில்..,கரைகளை  அவர்கள் தவற விட்டு விட்டால்.., அந்த காகங்களை எடுத்து பறக்க விடுவர். காகங்கள் கரையை நோக்கி பறக்கும். உடனே அதை பின் தொடர்ந்து.., மாலுமிகள் கப்பலை செலுத்துவர், கரைகளை நோக்கி...,

  காகங்கள் ஊரில் வந்து கத்த தொடங்கியதும்.., கரையில் இருப்பவர்கள்.., யாரோ விருந்தாளிகள் வருகிறார்கள் என முடிவு செய்வார்கள்.!!

       மிருகங்கள் கத்தினால் ஊருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என சொல்வார்கள் பெரியவர்கள்..,உண்மையில் மிருகங்கள் கத்தினால்..,பெரிய விபரீதங்கள் நடக்க போகிறது என அர்த்தம். நில நடுக்கங்கள், சுனாமி போன்ற பேராபத்துக்கள் வருவது மிருகங்களுக்கு முன் கூட்டியே தெரிய வரும். எனவே தான் அவைகள் ஒலி எழுப்பும்.!!

    பூனை குறுக்கே வந்தால்.., அது ஆபத்து என்பார்கள்.  முந்தைய காலங்களில் ராஜாக்கள் போருக்கு செல்லும் போது..,செல்லும் வழிகளில் பூனை குறுக்கே வந்தால்..,அந்த இடத்தில் மக்களின் குடியிருப்புகள் இருப்பதாக நினைத்து தன் படைகளை வேறு வழியாக வழி நடத்தி செல்வார்கள். ராஜாக்கள்.!!

 ஆனால் நம்மவர்கள் அதையும் தவறாக புரிந்து கொண்டார்கள்.!

      நம்பிக்கைகளில் நல்லதும் இருக்கிறது. தீயதும் இருக்கிறது.., நாம் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை  எடுத்துக் கொள்ள வேண்டும்.! தீயவைகளை தவிர்க்க வேண்டும்...,!!!


                           உமா நாராயண், (குமரி உத்ரா) 

Monday, April 3, 2017

முகங்கள்..,!!!

  






பூமிப்பந்தின் மேலே.,
உலவும் உற்சாக முகங்கள்.,
ஊஞ்சலாய் தாலாட்டும் முகங்கள்..,!!


முக.., வரிகளை மறக்க முடியாமல்..,
முகவரி தேடிச் சென்று..,
முறுவலிக்கும் வெள்ளை முகங்கள்..,!!


பொய் முகங்கள்..,போலி முகங்கள்..,
போகின்ற வழி தோறும்..,
நெருடும் சில பொருந்தாத முகங்கள்..,!!


களவு முகங்கள்..,கருப்பு முகங்கள்..,
கசடு முகங்கள்..,இருளுக்குள்ளே..,
இடறும் வௌவால் முகங்கள்..,
இனியும் காண விரும்பாத சகதி முகங்கள்..,!!


வழியெல்லாம் முட்கள் போல.,
பல முகங்கள் முகவரி தந்தாலும்..,
வாசமிகு ரோஜாவைப் போல்.,
நல் முகங்களை நலம் காணுங்கள்..,!!


எத்தனை.., எத்தனை முகங்கள் பார்த்தாலும்..,
கர்ப்பத்தின் கைக்குள்ளே ..,
நாம் இருந்த போதே..,
இதழோரம் சிரிப்போடு ..,!!


இறைவன் தேர்ந்தெடுத்த..,
இரு முகங்கள்..,
தாய், தந்தை எனும் அன்பு முகங்கள்..,
போலி கலக்காத பொக்கிச முகங்கள்..,!!!


இல்லாளுடன் இணக்கமாகி..,
புதிதாய் ஒரு முகம் காண..,
பூரிப்புடன் காத்திருக்க..,!!


பூத்த புது மலர்கள் போல..,
மகன், மகளாய்..,
பாச முகங்கள்..,
நமக்காகவே இறைவன் அளித்த..,
வரப் பிரசாதங்கள்..,!!!


           உமா நாராயணன், (குமரி உத்ரா)




சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...