Wednesday, February 1, 2017

வெரசலாயிட்டேன்...,_ சிறுகதை ....,!!!

     


          நிரஞ்சனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை அவள்அவள்.., என்னையே கவனிக்கிறாள்..? ஏன்  புரியவில்லை..கண்களை உயர்த்தி, ஜன்னல் கம்பிகளுக்குள்ளே நிலவாய் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தான்.

      முத்து பற்கள் தெரிய அவள் மெல்ல சிரிப்பது போலிருந்தது. இவனுக்குள் ஆனந்தம்.. அணை போட  முடியவில்லை.சாலையில் யாரும் கவனிக்கிறார்களா?  என கவனித்து மெல்ல கைகளை ஆட்டினான். அதோ அவளும் இரு கைகளையும் ஆட்ட இவனுக்கு எங்கேயோ பறப்பதுப் போலிருந்தது.  நிச்சயம் அவள் தன்னைப் பார்த்துத் தான் கைகளை ஆட்டுகிறாள் அவன் தன்னிலைக்கு வர சிறிது நேரம் ஆனது.!!

     நிரஞ்சன் தன் எதிர்வீட்டில் குடிவந்திருந்த அந்த அழகான குடும்பத்தை அடிக்கடி நினைத்துக் கொண்டான், அதிலும்,அவர்களின் அழகான மகள், அவள் பெயரும் கூட எவ்வளவு அழகு!.

     மறுநாளே, தன்னை ஒரு முறைக்கு நாலுமுறை கண்ணாடியில் பார்த்து..,. இளநீலக்கலர்  ஜீனஸ்ம், டார்க் புளுவில் சர்ட்டும் அதற்கேற்ற வடிவமாய் வெளியே வந்தவனை அம்மா ஒரு மாதிரி பார்த்தாள்
.
       என்ன நிரஞ்ச் எங்கே போறே?”

       “என்னோட பிரெண்ட ஆனந்தைப் பார்க்கம்மா பொய் கூட அழகாக வந்தது.

        ஏனோ அவள் வீட்டின் முன்பு போகும்போதே இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது.  அவளும் ஜன்னல் வழியாக இவனையே பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள். நிரஞ்சனைப் பார்த்து கை அசைத்தபடி வந்தவள் சிரித்தபடி திடீரென உள்ளே ஓடினாள்.;

     அவனுக்குள் ஓரு சின்ன கோபம் தினமும் பார்க்கிறாள் சிரிக்கிறாள். ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையே..! ஏன் இந்த மௌனம்...? வெட்கமோ..!?,; அவன் ஒரு முடிவோடு வீடு நோக்கி சென்றான்.!!

     மறுநாள், அவளின் வீட்டருகில் வரும்போதே கவனித்தான் அவள் தோட்டத்தில் நின்றிருப்பதை..., மெல்ல பாதம் பதித்து சத்தம் இல்லாமல் உள்ளே சென்றவன் மிஸ் மௌனிகா.., உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.’’ ‘’எத்தனை நாளைக்கு இப்படி சிரிச்சிட்டே இருப்பீங்க...  பிளீஸ் இன்னைக்காவது நாம கொஞ்சம் பேசவோமேஎன்றவனை மௌனமாய் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.!!

        ஓ மௌனம் தான் சம்மதத்திற்கு அடையாளமோ..? என்று சிரித்தபடி வந்தவன் அதிர்ந்து நின்றான்.

    வேகமாக வந்து நின்ற அந்த வேனிலிருந்து இறங்கியவர்களிடம், அவள் தந்தை தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

     டாக்டர் இப்போ மூணு மாசமா, அவளுக்கு நோய் கூடியிருக்குன்னு நினைக்கிறேன்  எப்பவும், மௌனமா  இருக்கிறவ இப்போல்லாம் அடிக்கடி சிரிக்கிறா!!  சாலையில் போறவங்க  யாரைப் பார்த்தாலும் கை அசைக்கிறா..! அதனால் அவளுக்கு இந்த பைத்தியம் தெளியறது வரை ஆஸ்பத்திரியிலே இருக்கட்டும் டாக்டர் !” அவள் அப்பா சொல்ல.., சொல்ல..,

    இவன் யாருக்கும் தெரியாமல்  நொறுங்கி கொண்டிருந்தான்.!!

             உமா நாராயண்.(குமரி உத்ரா)

                                            

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...