Tuesday, January 10, 2017

விழிகள் _ சிறுகதை...!!!

   
     கார்த்திகா இரு வாரமாக, கவனித்து கொண்டுதான் இருக்கிறாள். பூக்கள் விற்க வரும் வேணி.., கார்த்திகாவின் மகள் காவ்யாவை..,  அடிக்கடி வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பதை..,! 

 காவ்யா..,  .,கார்த்திகா, ராகவனின் ஐந்து வயது மகள்.!!

          பூக்களை கொடுக்கும் சாக்கில், காவ்யாவிடம் பேசுவதும்., அவளை விழி நோகாமல் பார்ப்பதும்.., ம்ஹூம்.,இந்த வேணி சரியில்லை...!!

      கண் திருஷ்டியில்.., குழந்தைக்கு ஏதாவது வந்து விட்டால்.,? ராகவனிடம் சொல்லி, எச்சரிக்க வேண்டும்.! நினைத்தபடியே வெளியே வந்தாள்.

     இதோ, வேணி வந்து விட்டாள்.“”அம்மா என்ன பூ வேணும்மா..??”

 “”பூக்கள் வேண்டாம் நீ போ””. கார்த்திகா அவசரமாக சொன்னாள்.

     தோட்டத்தில் டாமியோடு விளையாடிக்கொண்டிருந்த,காவ்யா..,"பாட்டி பூ வேணும்..! அம்மா, பாட்டி தினம் எனக்கு..,பூ வச்சி விடுவாங்க. பாட்டி அந்த ரெட் கலர் ரோஜாப்பூ..,எனக்கு வச்சி  விடுங்க பாட்டி...," சந்தோசத்தில் சத்தமிட்டாள்.

       “என் பட்டுக்குட்டி.,உனக்கு இந்த ரோஜாப்பூ நல்லா இருக்கும்.நீ நல்லா இருக்கணும்.”கன்னத்தை மெல்ல வருடினாள் வேணி.””

    "பாட்டி நாளைக்கு வெள்ளை சாமந்தி கொண்டு வருவியா பாட்டி..?"

     ”என் கண்ணு.., உனக்கு இல்லாத பூவா.?” பாட்டி நாளைக்கு கொண்டு   வர்றேன்”.கன்னத்தில் முத்தமிட்டவள் ,பூக்கூடையை எடுத்தபடி நடந்தாள்.

 “காவ்யா உள்ளே வாடி..,அதட்டலாய் அழைத்தாள் கார்த்திகா.

      வேணியின் மனக்கண் முன் மகன் சுரேந்தர் முகம் வந்து போனது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில்.., இறந்துபோன செல்ல மகனின் கண்களை,  காவ்யாவின் சின்ன முகத்தில் கண்ட போது., ஏதோ தன் மகனையே கண்டு விட்ட மகிழ்ச்சி..!!

மௌனமாய் அழுத அந்த தாயுள்ளம்..., நாளைக்கு சாமந்தி பூ வாங்கிடனும். நினைத்தபடி மெல்ல நடக்க ஆரம்பித்தது..!! 


                உமா நாராயண் (குமரி உத்ரா)

        
.    

      

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...