Sunday, December 25, 2016

மகிழ்ச்சியின் வகைகள் ...!!

குழி விழுந்த கண்களோடு ..,
ஒட்டிப்போன வயிற்றோடு ..,
வெட்டிவேராய் சுருங்கிய..
முக வரிகளோடு..,
மூத்தவர், விதைத்த நெல் நாற்றுக்களை..
வெடித்த தேகங்களில்..,உள்வாங்கி..,
வேதனை தாங்காமல் நிலமங்கை..!!

காண சகிக்காமல்,ஆகாய பொத்தல் வழியே..,
மடிந்து விழுந்த மழைத்துளிகள்.,
முதல் வருடல் கொடுத்து.,
முத்தம்(மாரி )பொழிய..,
நாளை அந்த நெல்மணிகள் ..,
நாலுபேர் பசியாற்றும்..,!
விவசாயி மகனுக்கோ..,முகமெல்லாம் மகிழ்ச்சி.!!
 
புது மாங்கல்ய  சரடொடு..,
இதயம் இறகாய் பறக்க ..,
வண்ணத்து பூச்சியின் 
கண் கவர் வண்ணங்களோடு.,
வாழ்க்கை நந்தவனத்திற்குள் நுழைந்து ..,
வாழ்ந்த வாழ்வுக்கு ஒரு சாட்சியாய் ..,!!

கருவறையின் கதவை, குழந்தை தட்டும்போது..,
பாவை அவள், பற் கடித்து.. பலமிழந்த போது..,
எழுதாத கவிதை  ஒன்று தன் நகலாய்..,
வெளிவந்த போது..,
தாய் பெறுவாள் தன்னகரில்லா மகிழ்ச்சி..!!

பாலைக்கு பிழைக்க வந்து ..,
எட்டுக்கு எட்டடியில்..,ஊன் சுருக்கி,உண்டி சுருக்கி.,
கனவு பெருக்கி, கண்ணீர் பெருக்கி..,
மிதியடியாய் தேய்ந்து, உதிரம் உதிர்த்து.,
நித்தம் தொழிலாளிகள் செய்யும்,வேலை யுத்தங்கள்.,!!

அலுமினிய பறவையில்,ஒரு பயணியாய் .,
தாய் மண் மிதித்து ,உயிர் நெக்குருக, உச்சி மோந்து.,
மனைவியின் விழி குளத்தில் நீந்தி.,
சொந்தங்களின் விரல் பிடிக்கையிலே.,
ஆயிரம் வானவில்கள் வரவேற்பது போல.,
அவனுக்கு,வரும் மட்டற்ற மகிழ்ச்சி..!!

உப்பு மூட்டை தூக்கி, பின் பாரமூட்டைகள் தூக்கி.,
சைக்கிள் மிதித்து, தேய்ந்த பாதரேகைகளோடு..,
தான் பாதசாரி ஆனாலும், தனயன்..,
அவன், பட்டதாரியாய் படிக்க..,
உண்டியல் உடைத்து.,பட்டினி கிடந்து..,
விறகடுப்பில் இன்னொரு விறகாய் ..,
உடையும் பெற்றோர்களை.,!!

பாரமாய் நினைத்து ,முதியோர்இல்லங்களில்..,
கைகழுவி விட்டு, விடைபெறும் சில ..,
விஷ.. விதைகளில்...,,
தன் வாரிசுகள் மட்டும்..,
தம்மை கடைசிவரை காக்கும்..,
என்ற நம்பிக்கையில்..,சிரிக்கும்.,
மூத்தவர்களின் மகிழ்ச்சி..!!

மகிழ்ச்சி..,  ஒரே வகை ..,!!
மனங்கள்.., தான் பல வகை..!!

மகிழ்ச்சி என்னும் மகுடம் அணி..,
ராஜாவாய் நீ ..!!

மகிழ்ச்சி என்னும் பாரிஜாதத்தை நேசி..,
மணமாய் நீ..!!

மகிழ்ச்சி என்னும் புல்லாங்குழலை வாசி..,
இசையாய் நீ..!!

மகிழ்ச்சி என்னும் மந்திரத்தை சுவாசி..,
நீயே என்றும் சுகவாசி...!!
                                    உமா நாராயண்.(குமரி உத்ரா) 

                                      

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...